Thursday, October 21, 2010

இந்தியாவில் வசிப்பது இனி ரொம்ப காஸ்ட்லி சமாச்சாரம்!

Source from thatstamil.com.Thanks thatstamil.

ஒரு காலமிருந்தது... மாதம் ரூ 4000 சம்பளம் கிடைத்தால் போதும், வீடு, வாகனம், வசதியான வாழ்க்கை என நிம்மதியாக இருக்கலாம் இந்தியாவில், என்ற காலம் ஒன்றிருந்தது.

ஆனால் இன்று... ரூ 40 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் மாதக் கடைசி கடன்கள் நின்றபாடில்லை. வருமானம் இருக்கிறதோ இல்லையோ, விலை கூடவோ குறைவோ... தேவைக்கும் அதிகமாகவே நுகர் பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள். நுகர்வுக் கலாச்சாரம் என்ற பெயரில், பெரும் கடனாளிகளாகிக் கொண்டிருக்கும் நிலை.

இந்த நுகர்வுக் கலாச்சாரத்தை கண்ணை மூடிக் கொண்டு அனுபவிக்கத் தொடங்கியதன் விளைவு... கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாட்டின் விலைவாசி சராசரியாக 126 சதவீதம் உயர்ந்துவிட்டது.

மத்திய அரசின் புள்ளி விவரத்துறை அறிக்கையின்படி, இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் உணவான அரிசி விலை 2006-ல் குவின்டாலுக்கு ரூ 3031 ஆக இருந்தது. இன்று அதே அரிசி, அதே எடை, ஆனால் விலை ரூ 6859!

வெங்காயத்தின் விலை 98 சதவீதம் உயர்ந்துள்ளது. இறைச்சியின் விலை 44 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது (கோழி / ஆடு). மீன் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது! 25 ரூபாய் விற்ற ஒரு கிலோ பூண்டு, ரூ 200-ல் வந்து நிற்கிறது. இவையெல்லாம் சும்மா... சாம்பிள்கள்தான்.

நுகர்வோர் விலைக் குறியீட்டெண்களைப் பொறுத்தவரை 30 சதவீத உயர்வு காணப்படுகிறது. இதற்கு முன் எப்போதுமே பார்த்திராத மோசமான விலை உயர்வு, என அலறுகிறார்கள் நிபுணர்கள்.

பொருளியல் நிபுணர்களிடம் பேசியதில், "இந்த விலை உயர்வு பற்றி வெளிவந்திருக்கும் விவரங்கள் எல்லாமே, ஐஸ் மலையின் ஒரு சிறிய நுனிப்பகுதிதான். அதற்குக் கீழே உள்ள பிரமாண்ட ஐஸ் மலை இருக்கிறதே... அதுதான் இந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பையே உடைக்கக் கூடியதாக உள்ளது. யார் சொல்லி இந்த லைஃப் ஸ்டைலுக்கு மாறினோம்.... நாமாக... விளம்பரங்கள், மார்க்கெட்டிங் உத்திகளைப் பார்த்துத்தானே... இப்போதாவது ஒரு நிதானத்துக்கு வரவேண்டும் மக்கள். இல்லாவிட்டால், இந்தக் கப்பல், விலை என்ற ஐஸ் மலையில் மோதிச் சிதறுவதைப் பார்த்துக் கொண்டு அழும் அமெரிக்க நிலைதான் இந்தியாவுக்கும்..." என்கின்றனர் கவலையுடன்.

நாட்டின் நான்கு பெரு நகரங்களில் விலை நிலையை ஆராய்ந்ததில், இருப்பதிலேயே தலை நகர் டெல்லியில் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. ஆனால் சென்னை மகா மோசம். நாட்டின் சராசரி விலைவாசி உயர்வை விட அதிகமாக, 146 சதவீத உயர்வாக உள்ளது.

லைஃப்ஸ்டைல் மாற்றம்தான் இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றனர் பொருளியலறிஞர்கள். இந்த லைஃப்ஸ்டைல்தான் ஒவ்வொரு குடும்பமும் மருத்துவ செலவுக்கென்று தனி பட்ஜெட் போட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது. வாழ்க்கை, சுகாதாரம்... இரண்டையுமே பாதித்துள்ள இந்த நவீன வாழ்க்கை முறை விபத்தில் முடியும் முன், இப்போது தேவை ஒரு உடனடி ப்ரேக்!

அதை எப்படி, எந்த கட்டத்தில் போட்டுக் கொள்ளப் போகிறோம்?

No comments: